உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதையற்ற சமுதாயம் உருவாக்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திருமதி பிரின்சஸ் ஷோபனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்ட மதுவிலக்கு இயக்கம் மற்றும் போதைநோய் நலப்பணிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மதுவிலக்கு இயக்கத்தின் இயக்குநர் அருட்தந்தை பிரதீஸ் அ. கற்றார், தருவைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.கே. மணி மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை பவுல் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி. கிரேஸ் கலந்து கொண்டு, குறும்படங்கள் மற்றும் காணொளிகள் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஊடகப் போதை, மதுப் போதை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் பல்வேறு வகையான போதைப் பழக்கங்களின் தீமைகள் குறித்து விளக்கி, மாணவர்கள் அறநெறியுடனும் பொறுப்புணர்வுடனும் வாழ்ந்து போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், உடல் நலம், மன நலம் மற்றும் குடும்ப நலனுக்கு போதைப் பழக்கங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களது வாழ்க்கை இலக்குகளை அடைய கல்வி, ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஆங்கில முதுகலை ஆசிரியர் திரு. கே. தங்கபாண்டி, கணினி ஆசிரியர் திருமதி ஏ. அந்தோனி ரோஸ்லின் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.
இறுதியில், நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய தருவைக்குளம் மதுவிலக்கு இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. போதையற்ற, விழிப்புணர்வுமிக்க மற்றும் பொறுப்பான இளைய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.