பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மேற்கு மண்டல் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல தலைவர் லிங்கசெல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவது, வார்டு வாரியாக பொறுப்பாளர்களின் பணிகளை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டிகளை முழுமையாக அமைப்பது, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து புதிய வாக்காளர்களை இணைப்பது, வீடு தோறும் சென்று மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேலும், வார்டு வாரியாக மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள், தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளை செயல்படுத்துதல், சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளையும் தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில் ஒவ்வொரு வார்டிலும் ஒருங்கிணைந்த களப்பணிகளை மேற்கொண்டு, நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரச்சாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம், மேற்கு மண்டல கூட்டுறவுப் பிரிவு தலைவர் சிவக்குமார், மேற்கு மண்டல மீனவர் பிரிவு தலைவர் வினோத், சக்தி கேந்திரம் மற்றும் பூத் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.