இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கே.பி. தளவாய்புரத்தைச் சேர்ந்த வீரர் சுடலைமணி, நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடைபெற்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இன்று அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஸ்ரீநாத் நேரில் சென்று வீரர் சுடலைமணியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், வீரமரணம் அடைந்த சுடலைமணியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரரின் சேவையை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த வீரர் சுடலைமணியின் மறைவு தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.