Breaking News

தூத்துக்குடி மாநகரில் வளர்ச்சிப் பணிகள் தீவிரம் – பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு புதிய சேவைகளை தொடங்கி வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் அடிப்படை தேவைகள் தொடர்பான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஸ்டெம் பூங்காவின் பின்புறம் செயற்கை குளத்துடன் கூடிய நடைபயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


அதேபோல், கோக்கூர் கம்மா பகுதியில் நடைபெற்று வரும் குளத்துடன் கூடிய நடைபயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஜான் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். மில்லர்புரம் பகுதியில் பாதாள சாக்கடை நீர் வெளியேறாமல் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளை விரைவாக பராமரிக்கும் நோக்கில் புதிதாக வாங்கப்பட்ட சிறப்பு வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


எட்டயபுரம் ரோடு ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுரேஷ்குமார், ரவீந்திரன், கனகராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். டூவிபுரம் சங்கர நாராயணன் பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வரும் குடிநீரின் அளவு மற்றும் அங்கிருந்து வெளியேறும் நீரின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு குடிநீர் விநியோக நிலவரத்தை மதிப்பீடு செய்தார். இந்த நிகழ்வில் ரவீந்திரன், செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, நகரின் வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.


  • Share on

புதிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள்!!

  • Share on

Trending News