கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் 7 மாத குழந்தையின் உயிரைக் காக்கும் முயற்சியில், வெறும் நான்கு மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கி மனிதநேய சேவையை வெளிப்படுத்திய எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 மாத குழந்தை கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக உறவுமுறைச் சான்றிதழ் அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால், குழந்தையின் குடும்பத்தினர் உதவிக்காக சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த கரு. இராஜசேகரன் ஆகியோர் மனுதாரருடன் நேரடியாக எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினர். குழந்தையின் அவசர நிலையை அறிந்த வட்டாட்சியர் சுபா, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரையும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையும் தொடர்புகொண்டு உடனடி விசாரணை நடத்தி பரிந்துரை அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இருந்து தேவையான விசாரணை அறிக்கைகள் பெற்று சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் வெளியே சென்றிருந்த நிலையிலும், வேறு அலுவலரை நியமித்து உறவுமுறைச் சான்றிதழ் தயாரிக்க ஏற்பாடு செய்தார். மாலை அலுவலக நேரம் முடிவதற்கு முன்பாகவே உறவுமுறைச் சான்றிதழ் வழங்கப்பட்டதால், குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளும் சூழல் உருவானது.
பொதுமக்கள் பல இடங்களில் அலுவலக நடைமுறைகளால் அலைக்கழிக்கப்படும் சூழலில், அவசர தேவையை உணர்ந்து மனிதநேயத்துடன் செயல்பட்ட எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் சேவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. “அலுவலக நடைமுறைகளைத் தாண்டி மனிதநேயத்தை முன்னிறுத்திய சேவை இது” என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.