தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் மற்றும் தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.
கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அணி மற்றும் பிரிவு தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என நிர்வாகிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் பேசுகையில், கட்சியின் வளர்ச்சிக்கும் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கும் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க அணி, பிரிவு மற்றும் கிளை மட்டங்களில் இருந்து தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சி யாரையும் மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு அல்ல. தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகிய உயர்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இயக்கமாகும். கிராமம் முதல் தேசிய அளவு வரை வலுவான நிர்வாகக் கட்டமைப்பு, அர்ப்பணிப்பு மிக்க தொண்டர் பலம் மற்றும் தொடர்ந்து புதிய தலைவர்களை உருவாக்கும் திறன் ஆகியவை கட்சியின் மிகப்பெரிய பலமாகும். எந்தச் சூழலிலும் கட்சியின் பயணத்தை தடுக்க முடியாத வலிமையை இந்த அமைப்பே வழங்குகிறது” என்றார்.
தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் முக்கியமான ஜனநாயக களமாகும். வீடு தோறும் சென்று கட்சியின் சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்தி, தேர்தலை முழுமையான திட்டமிடலுடன் எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி. ராஜா, மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் மற்றும் அணி, பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.