நிஷாந்த் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், அரசியல் ஆதாயத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிஷாந்த் உயிரிழந்த தகவல் கிடைத்த உடனேயே தமிழக அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ஜூன் 11-ஆம் தேதி இரவு தகவல் கிடைத்த நிலையில், ஜூன் 12-ஆம் தேதி முதல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசி விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எழுதியுள்ள கடிதத்தின் நகலும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த விவகாரத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகளும், பல்வேறு தரப்பினர் ஆற்றிய பங்களிப்புகளும் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்நிலையில், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுவது உண்மையை மறைக்கும் செயலாகும்.
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக தெரிகிறது. தூத்துக்குடி மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் அரசியல் செய்யலாம்; ஆனால் ஒரு துக்கமான நிகழ்வைக் கூட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆதாரங்கள் வெளிப்படையாக இருக்கும் நிலையில் தவறான தகவல்களை பரப்புவது சம்பந்தப்பட்டவர்களின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும்.
அரசியல் என்பது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும்; துயரமான சம்பவங்களை அரசியல் ஆயுதமாக மாற்றுவதற்காக அல்ல. உண்மைகள் வெளிவந்த பிறகும் தவறான குற்றச்சாட்டுகளை தொடர்வது மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே பார்க்கப்படும்.
– பெருமாள்சாமி கதிர்வேல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்