திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் மற்றும் பல்வேறு வழிபாடுகளுக்கான கட்டணங்களை உயர்த்தும் நடவடிக்கையை கோயில் நிர்வாகம் கைவிட்டு, பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருத்தலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கதாகும்.
இந்நிலையில், அபிஷேக தரிசனம், தங்கரத உலா, சண்முகார்ச்சனை, மூலவர் அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் ஒன்பதுகால பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பொதுமக்கள் மற்றும் நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கோயில்கள் என்பது ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமமாக இறைவனை வழிபடும் புனித இடமாகும். பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளையும், பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கோயில் நிர்வாகம், வருவாய் நோக்கில் கட்டணங்களை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே, பக்தர்களின் உணர்வுகளை மதித்து இந்த கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை, தங்குமிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, எளிதாகவும் சிரமமின்றியும் இறைவனை தரிசிக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்று சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.