இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் செயல்பட்டு வரும் பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியின் புதிய முதல்வராக விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜெ.சரவணக்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த முனைவர் ஜெ.சரவணக்குமார், திரு. ஜெயராமன் – திருமதி முத்து கோப்பம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், விருதுநகர் ஹிந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். பின்னர் இராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் விரிவுரையாளராக சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2008ஆம் ஆண்டு பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து ஆங்கிலத் துறைத் தலைவராகவும் பல்வேறு கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வந்தார். தென் தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் நினைவாக 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தின் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்கும் நோக்கில் இயங்கி வரும் இக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 18 ஆண்டுகளாக கல்விப் பணியிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த முனைவர் ஜெ.சரவணக்குமார் அண்மையில் முதல்வராக பதவி உயர்வு பெற்று, இம்மாதம் 1-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது மனைவி திருமதி எஸ். சித்ராதேவி (எம்.காம்.) ஆவார். இவர்களுக்கு எஸ். நிதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். முனைவர் ஜெ.சரவணக்குமார் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வை. மலைராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு. பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. நடராஜன் பி.காம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து, அவரது பணிக்காலம் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும் மாணவர் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமைய வாழ்த்தினர்.