தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணார் 3வது தெரு தொடர்ச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் கொடை விழாவை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கிய கொடை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் வளம் பெருகவும், மழை வளம் செழிக்கவும் வேண்டி கோவில் வளாகத்தில் 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடார் மகமை தலைவர் மற்றும் தொழிலதிபர் கே.ஏ.பி. சீனிவாசன் குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு தங்க நாணயம், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எஸ். சண்முகராஜ் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 30ஆம் தேதி கொடை விழாவை முன்னிட்டு இரவு முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சாமக்கொடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.