அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்’ புதிய இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 26) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உமரி எஸ். சத்தியசீலன் தலைமையில் நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக சின்னதங்கம், ராஜேஷ்கனி, துர்கையப்பன், ஆசை மாதவன், பொன் விக்னேஷ் உள்ளிட்டோர் தலைமையிலும், தொடர்ந்து சிவத்தையாபுரத்தில் ஹரிகரசுதன், ஆத்தூரில் சரவணன், ஸ்ரீவைகுண்டத்தில் பாலமுருகன், ஆறுமுகநேரியில் சண்முகம் உள்ளிட்டோர் தலைமையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்கள் மூலம் சுமார் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இயக்கத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து தெற்கு மாவட்ட நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில், ‘வி த லீடர்’ அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி சிறப்பு அழைப்பாளராக கரு நாகராஜன் பங்கேற்கிறார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள இயக்கத்தின் புதிய செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை உமரி சத்தியசீலன், சின்னதங்கம், மாதவன், ராஜேஷ்கனி, சிவமுருகன் ஆதித்தன், பால பொய்சொல்லான், துர்கையப்பன், ஜமீன் கிருஷ்ணன், கார்த்திகை மீனா, எம்.சி. சேகர், ராஜகோபால், கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, அண்ணாமலை இயக்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலர்களிடம் விளக்கம் கோரி பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் நேற்று நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.