Breaking News

"உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுங்கள்; அண்ணாமலையின் புதிய இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் – கரு நாகராஜன்"

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணாமலை தொடங்கிய "வி த லீடர்" புதிய இயக்கத்தின் மாவட்ட அளவிலான முதல் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உமரி எஸ். சத்தியசீலன் தலைமை வகித்தார்.


சிவமுருக ஆதித்தன், சின்னதங்கம், ஜமீன் கிருஷ்ணன், பொன் விக்னேஷ், துர்க்கையப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாதவன், ராஜேஷ்கனி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில் அண்ணாமலையின் பிரதிநிதியாக கரு நாகராஜன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:


"சமூக சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர் அண்ணாமலை. எந்த விஷயத்தையும் ஆழமாக உள்வாங்கி மக்களிடம் கொண்டு செல்லும் திறன் அவருக்கு உள்ளது. தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருப்பதற்குக் காரணமும் அதுதான். பாஜக வாக்கு வங்கியை உயர்த்துவதற்காக அண்ணாமலை கடுமையாக உழைத்தார். திமுக அரசின் தவறுகளை வெளிக்கொண்டு வந்தார். அதன் அரசியல் பலனை இன்று விஜய் அறுவடை செய்து வருகிறார்.


விஜய் கட்சி தொடங்கிய உடனே முதல்வராகவில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சுமார் 30 ஆண்டுகள் திரைப்படத் துறையில் செயல்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் மனதில் இடம்பிடித்தார். இன்று அந்த தலைமுறை இளைஞர்களாக வளர்ந்து அவருக்கு ஆதரவளித்து வருகிறது. திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசை அண்ணாமலை பாராட்டியுள்ளார்.


திமுக பைல்ஸ் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு, அவற்றுக்காக நீதிமன்றங்களில் நேரடியாக வாதாடியும் வருகிறார். அனைத்து ஊழல் வழக்குகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்" என்றார். மேலும், "வி த லீடர்" அமைப்பின் சார்பில் ஜூலை 12ஆம் தேதி பொள்ளாச்சியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலை இதில் நிறைவுரையாற்ற உள்ளார்" என்றார்.


அண்ணா ஹசாரே போன்று சமூக நல நோக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக சமூக சேவை, விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் பணிகளில் ஈடுபட்டு, பின்னர் தீவிர அரசியலுக்குள் நுழைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "புதிய உறுப்பினர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். விவசாயத்திற்கு பயன்படும் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அண்ணாமலை நேரில் வருவார்" என்றும் அவர் கூறினார்.


தொடர்ந்து அவரது முன்னிலையில் பாஜக மண்டலத் தலைவர்கள் சாத்தான்குளம் சரவணன், ஆழ்வை கிழக்கு சிவஜோதி பாண்டியன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் இயக்கத்தில் இணைந்தனர். மேலும் சுரபி கல்வி மற்றும் சமூகத் தொண்டு நிறுவனத் தலைவர் செல்வராஜும் தனது ஆதரவாளர்களுடன் இயக்கத்தில் இணைந்தார். கூட்டத்தில் சிவத்தையாபுரம் ஹரிகரசுதன், ஸ்ரீவைகுண்டம் பாலமுருகன், முருகேசன், வேல்முருகன், பாலக்குமார், ராஜகோபால், எம்.சி. சேகர், சுனாமி ஆறுமுகம், கார்த்திகை மீனா, சிலம்பொழி, ஐஸ்வர்யா, ராமக்கனி, தங்கரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


  • Share on

பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற முனைவர் ஜெ.சரவணக்குமாருக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் வாழ்த்து!!

கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து சேவை: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!!

  • Share on

Trending News