Breaking News

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் வேண்டாம்! – தவெக அரசை கடுமையாகச் சாடிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!!

  • Share on

தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் சாதி மற்றும் மதம் தொடர்பான விவரங்கள் இடம்பெறக் கூடாது என முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.


தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “தற்போது தமிழக அமைச்சர்கள் பலர் சமூக ஊடக ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளனர். கல்வி அமைச்சர் பள்ளியிலேயே மாணவர்களுடன் நடனமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாட்டின் கல்வி நிர்வாகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாக உள்ளது.


மாநில வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக விளம்பர நடவடிக்கைகளிலேயே அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் விவகாரம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் அவர் எந்த மாநிலத்தின் நலனுக்காக செயல்படுவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல், தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கையாகவே உள்ளது.


மாநிலத்தின் நிதிநிலை குறித்த விவரங்கள் ஏற்கனவே முந்தைய திமுக அரசின் நிதிநிலை அறிக்கைகளில் தெளிவாக இடம்பெற்றிருந்தன. தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து குழந்தைகளுக்கும் ‘தாய்மாமன் சீர்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்குவது என்பது நீண்டகாலமாக இருந்து வரும் வழக்கமான நடைமுறையாகும். இந்நிலையில், வருவாய்த்துறை மாணவர்களுக்கு வழங்க உள்ள அடையாள அட்டைகளில் சாதி மற்றும் மதம் குறித்த விவரங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாணவர்களின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையிலான இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று கீதா ஜீவன் வலியுறுத்தினார்.


  • Share on

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி: ஒரே சீரான கல்விக்காக காங்கிரஸ் வலியுறுத்தல்!!

எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீரமரணம் அடைந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர் சுடலைமணிக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி!!

  • Share on

Trending News