Breaking News

தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கிய பத்ரகாளியம்மன் கொடை விழா – மேல சண்முகபுரம் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் மேல சண்முகபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழாவில், தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


பல கோவில் திருவிழாக்களில் வெளிமாநில இசைக்கருவிகளான செண்டை மேளம், நாசிக் டோல் போன்றவை பயன்படுத்தப்படும் நிலையில், மேல சண்முகபுரம் இளைஞர்கள் பல ஆண்டுகளாக தப்பு, உறுமி மேளம், பறை, தவில், நையாண்டி மேளம், ராஜ மேளம், கட்டக்குழல் உள்ளிட்ட தமிழர் மரபு இசைக்கருவிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பண்பாட்டு முயற்சி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்த முயற்சியை பாராட்டிய தமிழன்டா இயக்கம் மற்றும் பல்வேறு கலைக்குழுக்கள், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் சிறந்த முன்னுதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தமிழன்டா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கோவில் திருவிழாக்களில் சொந்த மண்ணின் இசையும் பண்பாடும் ஒலிக்க வேண்டும். இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி தமிழ் அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, பாரம்பரிய தமிழ் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ராஜ மேளம், கட்டக்குழல் மேளம், வாடிப்பட்டி தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருவது சாதாரண செயல் அல்ல என்றும், மேல சண்முகபுரம் இளைஞர்களின் பண்பாட்டு விழிப்புணர்வு மற்ற ஊர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


விழாவின் போது தப்பு மேளக் கலைஞர்கள் உற்சாகமான இசை நிகழ்ச்சிகளை வழங்கினர். வண்ணமயமான அலங்காரங்கள், மின்விளக்கு ஒளியமைப்புகள் மற்றும் திரளான பக்தர்களின் பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பத்ரகாளியம்மனை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


கோவில் வளாகம் முழுவதும் பக்தி நிறைந்த சூழல் நிலவியதுடன், இளைஞர்களின் ஒற்றுமையான பங்களிப்பும் விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. தமிழர் பாரம்பரிய இசை மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


  • Share on

பிறவியிலேயே கண் இல்லாமல் பிறந்த சிறுமிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமான கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை!!

  • Share on

Trending News