தமிழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர் சரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுஇடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக அமைச்சர் விளக்க வீடியோ வெளியிட்டிருந்தாலும், அந்த விளக்கமும் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்திற்கும் எதிர்ப்பிற்கும் உள்ளானது.
இந்நிலையில், அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
இதையடுத்து, திமுக தலைமை அறிவிப்பின்படி இன்று தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் பால்துரை, முன்னாள் யூனியன் கவுன்சிலர் இரா. அந்தோணி, தனுஷ்பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண் மற்றும் பெண் மாணவர் அணியினரைச் சேர்ந்த சுமார் 125 பேர் அமைச்சர் பதவி விலகக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தூத்துக்குடி டிஎஸ்பி சுனில் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் அதிரடிப்படை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.