தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை சுமார் 3,000 ஏக்கர் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் முத்தையாபுரம் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு ஊர் எல்லையில் உள்ள நூதன விநாயகர் ஆலயம் முன்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாநில தேமுதிக தென்மண்டல செயலாளர் சந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்த பிரேமலதா விஜயகாந்த், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த பெண்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டார்.
இதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், “நாங்கள் தற்போது ஆளும் கட்சியும் அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல. இருப்பினும், உங்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம். தீர்வு கிடைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது உப்புதான்; அதன் பின்னர் முத்து குளித்தல். உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் போன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகும்.
உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது, தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தேமுதிக முழு ஆதரவுடன் குரல் கொடுத்து இந்த திட்டத்தை நிறுத்தும்,” என்று தெரிவித்தார்.