தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் இன்று காலை தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்கினை தவறாமல் செலுத்த வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத்தந்த இந்த மகத்தான ஜனநாயக உரிமையை மக்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.


மேலும், “விளையாட்டாகவோ, பரிசு போன்ற காரணங்களுக்காகவோ வாக்கினை வீணாக்கக்கூடாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக யார் உண்மையாக பணியாற்றுவார்கள் என்பதை சிந்தித்து, ஏற்கனவே செய்த பணிகளை மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும்,” என்றார்.


இந்தத் தேர்தல் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவது, எதிர்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கான அக்கறையையும், நல்லாட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.