தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், வருகின்ற மே மாதம் வீரபாண்டிய கட்டபொம்மு நினைவு ஜோதி தொடர் ஓட்ட பேரணியை தொடங்கி வைக்குமாறு எம்.பி. துரை வைகோ அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
எம்.பி. துரை வைகோ அவர்கள் இன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள் காலனியில் உள்ள காமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சத்யா நகர் மேம்பாலம் அருகிலுள்ள பெரியசாமி நகரில், மியான்மர் நாட்டில் சிக்கித் தவித்தவர்களை தனது முயற்சியால் மீட்டுக் கொண்டு வந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.
பின்னர், எட்டையபுரம் சாலையில் அருள்மிகு வீரசக்க தேவி ஆலய நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் துரை வைகோ அவர்களை சந்தித்தனர்.
அப்போது, வருகின்ற மே மாதத்தில் நடைபெறவுள்ள ஆலய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட துரை வைகோ, விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மு நினைவு ஜோதி மற்றும் புன்னிய தீர்த்தம் திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, திருச்செந்தூரில் நடைபெறும் நினைவு ஜோதி தொடர் ஓட்ட பேரணியை துவக்கி வைக்குமாறு தொண்டர் படை சார்பில் வலியுறுத்தப்பட்ட அழைப்பு வழங்கப்பட்டது.
இந்த அழைப்பை துரை வைகோ மகிழ்ச்சியுடன் ஏற்று, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவு ஜோதி பேரணியை தொடங்கி வைப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பு, ஆலய நிர்வாகிகள் மற்றும் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.