தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மண்டலத்தில் Bharatiya Janata Party (பா.ஜ.க.) சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோடு, பொன் சுப்பையா திருமண மண்டபம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.


சக்தி கேந்திர பொறுப்பாளர் திருமதி எம். செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் திரு. எஸ். காளிராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.


அவர் பேசுகையில், கிருஷ்ணராஜபுரம் மேல்பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டதாகவும், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு நான்காவது பைப்லைன் கொண்டு வரப்பட்டபோதுதான் அப்பகுதிக்கு குடிநீர் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.


மேலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு Swachh Bharat Mission திட்டத்தின் மூலம் நாட்டின் 140 கோடி மக்களுக்கும் சுகாதாரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 80 கோடி மக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் 22 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும், எந்தவித கமிஷனும் இன்றி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


முன்னர் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்தால் 15 முதல் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போது அதிகபட்சம் 48 மணி நேரத்தில் டெலிவரி வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இதற்கு மோடி அரசின் நிர்வாக திறனே காரணம் என வலியுறுத்தினார்.


தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், ஆனால் அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் சாலைகள் மற்றும் கால்வாய்கள் தரமாக பராமரிக்கப்படுகின்றன என்றும் அவர் சாடினார். இது பொதுமக்களிடம் பாரபட்சமான அணுகுமுறையை காட்டுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.


இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல் தலைவர் சுதா, மண்டல் பிரபாரி சரவணன், முன்னாள் மண்டல் தலைவர் சிவராமன், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, ஓபிசி ஐடி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.