தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரம், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் அவர் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


பிரச்சார கூட்டத்தில் பேசிய செல்லப்பாண்டியன், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது நடவடிக்கையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம்” என உறுதியளித்தார்.


மேலும், “மகளிருக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார். தற்போதைய திமுக அரசை விமர்சித்த அவர், “தேர்தல் வாக்குறுதிகளில் பல இன்னும் நிறைவேறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டன; அதேபோல் மீண்டும் மக்கள் நல ஆட்சி கொண்டு வரப்படும்” எனக் கூறினார்.


இந்த பிரச்சாரத்தில் தேசிய கூட்டணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.