தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, அரசு ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, பொங்கல் கொண்டாட்டத்தின் நடைமுறை காரணமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், விழாவிற்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு, மேடைக்கு முன்பாக நான்கு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் வருகைக்கு முன்பு, பானைகளில் நெருப்பு வைத்து கரிபடியாக்கப்பட்ட நிலையில், பின்னர் கேட்டரிங் நிறுவனத்தில் இருந்து தயார் செய்து கொண்டு வரப்பட்ட சர்க்கரை பொங்கல் அந்த பானைகளில் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


முதல்வர் ஸ்டாலின் வருகையையடுத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பானைகளிலிருந்து பொங்கலை எடுத்து அங்கிருந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கினார். ஆனால், நேரடியாக பொங்கல் வைக்காமல், வெளியில் தயாரிக்கப்பட்ட பொங்கலை பானையில் ஊற்றி வழங்கிய நிகழ்வு, “சம்பிரதாயத்திற்காக மட்டுமே விழா நடத்தப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பியதாக தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழா, அவர்களிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சியை விட அதிர்ச்சியையே ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது. நாங்கள் மட்டும் உழைக்கவில்லை; அரசு ஊழியர்களும் சேர்ந்து தான் உழைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சுவாமிநாதன், சுப்பிரமணியம், சேகர்பாபு, மகேஷ், தலைமைச் செயலர் முருகானந்தம், பல்வேறு துறை அரசு செயலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதற்கிடையே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புது பானையில் தண்ணீர் கொதித்தபோது பச்சரிசியை அள்ளிப்போட்டு, அடுப்பிற்கு ஆரத்தி எடுத்து வணங்கிய பிரதமர், அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு மாலை அணிவித்து உணவு வழங்கினார். அப்போது பிரதமர் உள்ளிட்ட அனைவரும் காலணிகளை கழற்றி வைத்து, பக்தி பெருக்குடன் பொங்கலை கொண்டாடிய காட்சி கவனத்தை ஈர்த்தது.


இந்த இரண்டு விழாக்களையும் ஒப்பிட்டு பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், “தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா உணர்வுபூர்வமானதா, அல்லது சம்பிரதாய பூர்த்திக்கான நிகழ்ச்சியா?” என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை தமிழர் உணர்வோடு இணைந்த விழா என்பதால், அதன் கொண்டாட்ட முறை அரசின் அணுகுமுறையை வெளிப்படுத்தும் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.