தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நான்காம் கேட் குறிஞ்சி நகர் பகுதியிலிருந்து தனசேகரன் நகர், ராம் நகர், ரஹ்மத் நகர், மச்சாது நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, ஜோதி நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை விரிவாக்க பணிகள் மற்றும் விரைவில் தொடங்கப்பட உள்ள பணித் தளங்களை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால், குறித்த வழித்தடங்களில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும், மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடன் இருந்தார்.