இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகவள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சார்லஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி, கிளைச் செயலாளர்கள் முருகன், இளங்கோ, ஊராட்சி செயலர் ராமலிங்கம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், காடுகள் அழிப்பிற்கு எதிரான விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் பாதுகாப்பு குறித்த உறுதிமொழிகளையும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட எம்எல்ஏ சண்முகையா, “நான் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக பணி செய்து வருகிறேன். என் தொகுதியில் 420-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தி செய்து வருகிறேன். இது தான் என்னுடைய பணி” என தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்களின் அறிவுறுத்தலின்படியும், தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
மாணவிகளிடம் உரையாற்றிய அவர், “நீங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, நல்ல முறையில் கல்வி கற்று உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மாணவிகளுக்காக கொண்டு வந்துள்ளது. கல்லூரி பருவம் மிகவும் அருமையானதும் அரிதானதுமான காலம். இந்த காலத்தை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
மேலும், என்.எஸ்.எஸ். முகாம் மூலம் கிராமங்களுக்கு சென்று மாணவிகள் செய்து வரும் சமூக சேவைகளை மனதார பாராட்டிய எம்எல்ஏ, அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டால், அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். மாணவிகள் கிராம சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எம்எல்ஏ சண்முகையாவின் உரையை மாணவிகள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, இறுதியில் அவருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து எம்எல்ஏவுடன் மாணவிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் ராஜா, சின்னதுரை, வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னான்டோ, வருவாய் ஆய்வாளர் அந்தோணி ராஜ், கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி, மின்வாரிய உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் சத்யராஜ், ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், செல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, தகவல் தொழில்நுட்ப அணி சின்னதுரை, கிளைச் செயலாளர்கள் ஜெயபால், சின்னதுரை, ராஜா, வினோத், சங்கர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.