“அனைவருக்குமான முதல்வர்” என்ற சிறப்பு நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் முன்னோட்ட தொகுப்பு தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பகுதி மக்கள் பங்கேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பலர் உணர்ச்சி வசப்பட்டு பேசும் தருணங்கள் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


முத்துநகர் பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளையும் கணவர்களையும் இழந்து பேரன், பேத்திகளுடன் வாழும் தங்களின் வாழ்க்கை வேதனையை விளக்கினர். அவர்கள் கூறிய துயரங்களை கேட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கண்கலங்கியபடி உரையாற்றினார்.


“முதியோரின் மனவேதனையை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் தான் ‘அன்பு சோலை’ திட்டத்தை தொடங்கினார். ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ‘சாப்பிட்டீர்களா?’ என்று அன்புடன் கேட்கும் அரசு இதுவே,” என அமைச்சர் உருக்கமாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய கல்லூரி மாணவிகள், “புதுமைப்பெண்” திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.12,000 உதவித்தொகை கிடைப்பதால் தங்கள் கல்வியை தாங்களே நிர்வகிக்க முடிகிறது என தெரிவித்தனர். மடிக்கணினி வழங்கப்பட்டதால் ப்ராஜெக்ட் பணிகளைச் செய்வதிலும், மேற்படிப்பிற்கும் பெரும் உதவியாக இருப்பதாக கூறினர்.


“முதல்வன்” திட்டம் மூலம் வெளிநாடுகளில் கல்வி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் இன்று உலகை அடையும் தைரியம் வந்துள்ளது,” என மாணவிகள் தெரிவித்தனர்.


மேலும், “ஒரு காலத்தில் கணவரிடம் சிறு தொகை கேட்டேன்; இன்று நான் சுயமாக சம்பாதிக்கிறேன். கலைஞர் வீடு திட்டத்தின் மூலம் நான் வீட்டு உரிமையாளராகி உள்ளேன். இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான்,” என பெண்கள் பெருமிதத்துடன் கூறினர்.


நிகழ்ச்சியின் இடையே ஒலிக்கும் “எத்தனை சாமி வந்ததய்யா…” என்ற பின்னணி இசை, மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து நிகழ்ச்சிக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்களின் உணர்வுகளையும், திராவிட மாடல் அரசின் சமூகநீதிச் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, ஞாயிறு இரவு 8 மணிக்கான ஒளிபரப்பை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.