தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து கதை சொல்லும் நிகழ்வை சிறப்பாக நடத்தின.
நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெ. ஜேக்கப் தலைமையுரையாற்றி, மாணவர்களின் அறிவு மற்றும் நற்பண்பு வளர்ச்சிக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டார்.
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன்சன், மாணவர் மாணவிகளுக்கு நற்பண்புகள் வளர்க்கும் பல சுவாரஸ்யமான கதைகளை கூறி தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நெறிகள் குறித்து ஊக்கமளித்தார். அவரது கதைகள் மாணவர்களை ஈர்த்ததுடன், நல்ல சிந்தனையை விதைத்தன.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர கிளை செயலாளர் தோழர் ஆ. மாரிமுத்து வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். தாளமுத்துநகர் கிளை செயலாளரும், புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் அமைப்பாளருமான தோழர் ரவி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.