தூத்துக்குடி மாநகரில் பல்வேறு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் பேனர் போர்டுகள் மற்றும் கட்டவுட்டுகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளரும் வழக்கறிஞருமான சீனிவாசன், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனிலிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் அரசு அனுமதி இன்றி ஏராளமான டிஜிட்டல் விளம்பர போர்டுகள் மற்றும் கட்டவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை சிதறடித்து விபத்துகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர போர்டுகள் போக்குவரத்திற்கு கடும் இடையூறாக இருப்பதால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சட்ட மீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் மனு தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.