அதிமுக அரசியலில் அனுபவம், அதிகாரம், எதிர்ப்புகள் என அனைத்தையும் கடந்து வந்த தலைவர் என்றால் அது ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், தெற்கு தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் என்பதே கட்சி வட்டாரங்களின் கருத்து. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவர் தற்போது ஆட்சி செய்யும் அரசியல் ஆட்டம் சாதாரணமானது அல்ல; அது திட்டமிட்ட “சதுரங்க வேட்டை” என விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர்.
1972 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து, பஞ்சாயத்து செயலாளர் முதல் அமைச்சர் வரை உயர்ந்த எஸ்.பி. சண்முகநாதன், ஸ்ரீவைகுண்டம் அரசியலில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார். அமைச்சரவையில் சேர்த்தலும், நீக்கமும், மீண்டும் வாய்ப்பும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கால அரசியலின் ஏற்ற இறக்கங்களை நேரடியாக அனுபவித்தவர். 2016 வரை அமைச்சராக இருந்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளுடனும் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒருகட்டத்தில், “கட்சியை வளர்ப்பதில் கவனம் இல்லை, அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல் தான் நடக்கிறது” என ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரையும் கடுமையாக சாடிய எஸ்.பி. சண்முகநாதன், தற்போது அதே கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து முழு கட்டுப்பாட்டை தனது கையில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், 2026 தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை அரசியல் களமாக மாறியுள்ளது. தெற்கு தூத்துக்குடி மாவட்டத்திலும் இதன் எதிரொலி வேகமாகப் பரவியது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் இருந்து மட்டும் விருப்ப மனுக்கள் தலைமையகத்தில் குவியத் தொடங்கின.
ஆனால், இங்குதான் அரசியல் சதுரங்கம் தொடங்கியதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. தனது சொந்த கோட்டையான ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மட்டும், எந்த மாற்று வேட்பாளரும் உருவாகக் கூடாது என்ற நோக்கில், கழக நிர்வாகிகள் விருப்ப மனு அளிக்காமல் இருக்க எஸ்.பி. சண்முகநாதன் நுட்பமான காய் நகர்த்தல்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. மற்ற இரண்டு தொகுதிகளில் காய்களை முன்னேற்றிவிட்டு, ஸ்ரீவைகுண்டத்தில் வேட்பு மனுவை பேருக்கு சிலரை மட்டும் வழங்க செய்து தனது ஆட்டத்தை உறைய வைத்திருப்பதே அவரது சதுரங்க வேட்டையின் மையம் என கூறப்படுகிறது.
மேலும், தனது மாவட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இருவரை முன் நிறுத்தி, அவரின் மூலம் விருப்ப மனு அளிக்கச் செய்ததும் இந்த சதுரங்கத்தின் ஒரு காயாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம், கவனம் வேறு திசைக்கு திரும்பி, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் தன்னை விரும்பாத நபர்களுக்கு சீட்டு கிடைக்காமல் தடுப்பதே இறுதி இலக்கு என பேசப்படுகிறது.
“கட்சியை வளர்ப்பதற்கான அரசியலா, அல்லது தன் அரசியல் வாரிசு பாதையை பாதுகாக்கும் முயற்சியா?” என்ற கேள்வி தற்போது தெற்கு தூத்துக்குடி அதிமுகவில் தீவிரமாக எழுந்துள்ளது. ஒவ்வொரு காயையும் கணக்கிட்டு நகர்த்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் இந்த அரசியல் சதுரங்க வேட்டை, 2026 தேர்தல் களத்தில் வெற்றியின் ‘செக் & மேட்’ ஆக மாறுமா, அல்லது எதிர்காய்களால் முறியடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி
“ஒவ்வொரு காயும் கணக்கில்… ஸ்ரீவைகுண்டத்தில் ‘செக் & மேட்’ முயற்சியா? – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் அரசியல் சதுரங்க வேட்டை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொங்கல் பண்டிகை முன்னேற்பாடுகள் தீவிரம்: பூங்கா மற்றும் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பில் 146 மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026