தூத்துக்குடி நகரில் இன்று மாலை அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்திய வகையில், அருகருகே இரண்டு வேறு நோக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்று மத்திய பாஜக அரசை குறிவைத்த திமுக தலைமையிலான கூட்டணி ஆர்ப்பாட்டம் மற்றொன்று மாநில திமுக அரசை நேரடியாக சாடிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்.


முதலில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவிடி (V.V.D) சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் கூட்டமைப்பு தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?”, “313 வாக்குறுதிகள் எங்கே?”, “70 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிடு”, “காலமுறை ஊதியம் வழங்கிடு” என முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக வேலைபளு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறாததால் ஏமாற்றம் நிலவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


அதே நேரத்தில், சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் (V.V.D சிக்னல்) அருகில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக குற்றம் சாட்டி மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ஒரே மாலையில், ஒரே பகுதியில், இரண்டு வேறு அரசுகளை குறிவைத்து நடைபெற்ற இந்த இரட்டை ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. ஒருபுறம் “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என திமுக குற்றம்சாட்ட, மறுபுறம் “மாநில அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என சத்துணவு ஊழியர்கள் சாடிய காட்சிகள் அரசியல் சிந்தனைகளுக்கு இடமளித்தன.


இரண்டு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக நடைபெற்றாலும், அதன் அரசியல் அர்த்தம் குறித்து நகரம் முழுவதும் தீவிரமான விவாதம் கிளம்பியுள்ளது.