அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் மீது அமைச்சர் கீதாஜீவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“செல்லப்பாண்டியன் அவர்கள் பேசும் விதம் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகள் கோமாவில் இருந்தவர்போல் தெரிகிறது. மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் போது நான் நேரடியாக பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலையை ஆய்வு செய்தேன். பிரையன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நிலைமை என்ன, தற்போது அது எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்,” என்றார்.
மேலும், “பக்கிள் ஓடை குறுகியதற்கு என்னையோ என் தந்தையாரையோ காரணம் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நாங்கள் இன்ஜினியர்களா?” என்று எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்தார்.
செல்லப்பாண்டியன் பேச்சு குறித்து தொடர்ந்து விமர்சித்த அவர், “அவரது பேச்சுகள் தரக்குறைவானவை. அரசியல் நாகரிகம் காக்கப்பட வேண்டும். இதற்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி தருவார்கள்,” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் அமைக்கும் திட்டம் உள்ளது. இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்,” என்றும் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.