தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் பெயர் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் மையமாக பேசப்படுகிறது.
அதிமுக சார்பில் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள சி.த. செல்லப்பாண்டியன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிர அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே தனித்த அடையாளத்தை உருவாக்கினார். அந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் இன்றும் பொதுமக்களிடையே பேசப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், அந்த தோல்வி அரசியல் வாழ்வில் பின்னடைவாக இல்லாமல், மீண்டும் மக்கள் தொடர்பை வலுப்படுத்திய காலகட்டமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தொடர்ந்து தொகுதி அரசியலில் தொடர்பை இழக்காமல் செயல்பட்டு வந்ததே தற்போது அவருக்குச் சாதகமாக மாறியுள்ளது.
கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தூத்துக்குடி தொகுதி, இந்த முறை அதிமுகவால் நேரடியாகவே களத்தில் இறங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், தற்போதைய திமுக எம்எல்ஏவுக்கு கடும் நெருக்கடியான போட்டி உருவாகும் என்பதே அரசியல் கணிப்பு.
அதிமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், பாரம்பரிய அதிமுக வாக்கு வங்கி, அமைச்சராக இருந்த கால அனுபவம், அமைப்பு பலம் மற்றும் தொகுதி முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஆகியவை அவருக்கு வலுவான பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், நீண்ட காலத்திற்கு பிறகு தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மீண்டும் அதிமுக கோட்டையாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், இந்தத் தொகுதியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி திமுகவுக்கு கடினமானதாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. தூத்துக்குடி அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்பது அதிமுக தலைமை எடுக்கும் முடிவே என்றாலும், தற்போதைய சூழலில் அரசியல் விமர்சகர்கள் ஒருமித்தமாக சுட்டும் பெயர் – சி.த. செல்லப்பாண்டியன் என்றே நிலவி வருகிறது.