தூத்துக்குடி மில்லர்புரம் சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று வரும் தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டி திரளான ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் இணைந்து இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

போட்டி துவக்க விழாவில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் நிறுவனத் தலைவர் சிலம்பு முனைவர் சுதாகரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். அதோடு, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் பொதுச்செயலாளர் கீதா மதுமோகன், மகளிர் அணி தலைவி முனைவர் கீதா, பொருளாளர் மோகன்குமார், தலைமை போட்டி இயக்குனர் ராஜமணிகண்டன், தலைமை வழக்கறிஞர் புவனேஸ்வரி, மாநில தொழில் நுட்ப இயக்குனர் ஆசான் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து போட்டியின் சிறப்பை மேம்படுத்தினர்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் சிறுவர் மற்றும் சிறுமியர் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, ஒற்றை ஆயுதம், இரட்டை ஆயுதம், மான் கொம்பு, அலங்கார சிலம்பம் போன்ற வகைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வகுப்பு வாரியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் மணி கணேஷ் போட்டியை திறம்பட ஒருங்கிணைத்து வருகிறார், மேலும் தேசிய அளவிலான இந்த சிலம்ப போட்டி மாலை 6 மணிவரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.