தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீ மூலக்கரை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக நகர பேருந்து (மகளிர் விடியல் பேருந்து) வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீ மூலக்கரை கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் 700 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதிய கல்வி வசதிகள் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தினமும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் சூழல் உள்ளது.
அதோடு கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் வெளி வேலைக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. ஆனால் இந்த ஊருக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை, காலை ஒருமுறை மாலை ஒருமுறை மட்டும் பேருந்து வசதிகள் உள்ளது. மிகக்குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளனர். அதோடு பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் போதும் கூட கட்டணம் செலுத்தி பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது.
பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பள்ளி சீருடையில் இருந்தால் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை சரிவர அரசு போக்குவரத்து நடத்துனர்கள் பின்பற்றுவதில்லை, கேட்டால் நகர பேருந்துகளில் பயணம் செய்தால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை, இந்த பேருந்துகளில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதற்கு என்ன காரணம் என்று கூட தெரியாமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய கூடிய அவல நிலைதான் உள்ளது. என்று சமூக ஆர்வலர்கள் வேதனையோடு கூறுகிறார்கள். ஸ்ரீ மூலக்கரை கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் அருகில் உள்ள பேட்மாநகரம் டவுனுக்கு சென்று அதன்பிறகுதான் ஸ்ரீவைகுண்டம், ஏரல், வாகை குளம் செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் உள்ளது.
ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் இருந்து பேட்மாநகரம் டவுனுக்கு செல்வதற்கு காலை மற்றும் மாலை மட்டுமே பேருந்து வசதிகள் உள்ளன. அதுவும் கட்டணம் செலுத்தி தான் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ள காரணத்தால் தூத்துக்குடியில் இருந்து புதுப்பட்டி, அடைக்கலாபுரம் வரை இயக்கப்படும் அரசு நகர பேருந்து 56 F பேருந்தை ஸ்ரீ மூலக்கரை கிராமம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கிராம பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் பலமுறை எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர், மற்றும் கோட்ட மேலாளர் என அனைவரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் இது சம்மந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட மனு அளித்த போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி எங்கள் தொகுதி எம்.எல்.ஏவும், அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி துணை மேலாளர் அவர்களுக்கும், தூத்துக்குடி கோட்ட மேலாளர் அவர்களுக்கும் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் அளித்த மனுவின் அடிப்படையில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் அரசு நகர பேருந்து 56 F பேருந்தை ஸ்ரீ மூலக்கரை கிராமம் வரை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தபால் மூலம் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
அதோடு மட்டுமல்லாது வாரந்தோறும் நடைபெறக்கூடிய பொதுமக்கள் குறை களையும் கூட்டத்தில் கூட மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அரசு நகர பேருந்தை ஸ்ரீ மூலக்கரை கிராமம் வரை நீட்டிப்பு சம்மந்தமாக மனு அளித்த போதும் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், துறை சம்மந்தமான அதிகாரிகளுக்கு உங்கள் கோரிக்கை கவனத்திற்கு எடுத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவு, எம்.எல்.ஏ., பரிந்துரை கடிதம் இவை அனைத்து உத்தரவுகளுக்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் கிடப்பில் போட்டுள்ளார்கள். அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி துணை மேலாளர் மற்றும் தூத்துக்குடி கோட்ட மேலாளர் எப்போது தான் எங்கள் கிராமத்திற்கு மகளிர் விடியல் பேருந்து சேவை வசதி எப்போது தான் கிடைக்கும் என்று ஸ்ரீ மூலக்கரை கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மக்களின் விடியல் அரசு என்று கூறும் திமுக அரசு தொகுதி எம்எல்ஏ கடிதம் வழங்கியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்க தாமதம் படுத்தும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிர் விடியல் பேருந்தை சேவையை ஸ்ரீ மூலக்கரை கிராமம் வரை நீட்டிப்பு செய்ய உத்தரவு இடக்கோரியும் தமிழக அரசுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.