பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவும், தொகுதி மறுவரையறை மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது, பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜனநாயக பிரதிநிதித்துவ விரிவாக்கத்திற்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என பாஜக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனது நாட்டின் பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருந்தால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக உயர்ந்திருக்கும்.
தற்போது மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14 சதவீதமாகவும், மாநில சட்டமன்றங்களில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளது. மசோதா நடைமுறைக்கு வந்திருந்தால், பெண்களின் பங்கு 33 சதவீதமாக உயர்ந்திருக்கும். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, குடும்ப நலன், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, ஊரக வளர்ச்சி போன்ற துறைகளில் பெண்கள் நேரடியாக கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்திருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புற மற்றும் விளிம்புநிலை பெண்களின் குரல் நாடாளுமன்றத்திற்குள் வலுவாக ஒலித்திருக்கும்.
இது வெறும் அரசியல் மசோதா அல்ல; பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கான கதவைத் திறக்கும் வரலாற்று வாய்ப்பு ஆகும். பெண்களுக்கு உரிய குரல் கிடைக்க வேண்டிய நேரத்தில் இந்த மசோதா தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது. அதேபோல், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் போனதும் நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தொகை மாற்றம், நகர்ப்புற வளர்ச்சி, புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியம்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், மக்கள் தொகைக்கு ஏற்ப சமமான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவம் மேலும் வலுப்பெற்றிருக்கும். மேலும், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை தற்போதைய 543-ல் இருந்து 850 வரை உயர்த்தும் முன்மொழிவு இருந்தது. இதன் மூலம் மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கும்.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளும் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்பு இருந்தது. இது தமிழ்நாட்டின் தேவைகள் மற்றும் உரிமைகளை தேசிய அளவில் வலியுறுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும். பெண்களுக்கு உரிய வாய்ப்பும், மக்களுக்கு மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டிய இந்த தருணத்தில், அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதாக்கள் முடக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
புதிய குடியிருப்பு பகுதிகள், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக தேவைகளை அரசியல் பார்வையில் அல்லாமல், வளர்ச்சி நோக்கில் அணுக வேண்டியது அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.