பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கர ராமேஸ்வரர் மற்றும் பாகம்பிரியாள் திருக்கோயிலில் சமபந்தி அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பேரறிஞர் அண்ணாவின் சமத்துவம், சமூக நீதி, மனிதநேயக் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இந்த சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். அண்ணா காட்டிய பாதையில் சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும் மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக, அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தி, சமத்துவத்தின் அடையாளமாக அனைவரையும் ஒரே வரிசையில் இணைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோவில் அறங்காவலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாணவரணி அமைப்பாளர் அருண் சுந்தர் பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.