தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் Holy Cross Home Science College கல்லூரியில் இன்று தமிழின் அழியாப் பண்பாட்டை நினைவு கூறும் விதமாக சிறப்பான இலக்கிய காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி அருட்சகோதரி ரூபா தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் முனைவர் அருட்சகோதரி ரோசாக்குட்டி ஜோசப் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக விகாசா பள்ளியின் தமிழ்த்துறை தலைவி எஸ்தர் ஜெபராணி, தூத்துக்குடி உடற்கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட செயலாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவிகள் தமிழரின் பாரம்பரியச் சிறப்புகளை பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தினர். Thanjavur Periya Kovil எனப்படும் தஞ்சை பெரிய கோயிலின் கலைநயத்தை அழகாக சித்தரித்து அனைவரையும் கவர்ந்தனர். மேலும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சங்க இலக்கியத்தின் ஐந்திணைகள், திருவிழாக்கள், பாரம்பரிய பண்பாடுகள், ஐவகை தானிய உணவுகள் ஆகியவற்றை உயிர்ப்புடன் விளக்கினர்.
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் தலைவன்–தலைவி கதாபாத்திரங்கள் மற்றும் புராணக் கதைகள் சித்திரங்களாகவும் நாடக வடிவிலும் அரங்கேற்றப்பட்டன. தமிழர்களின் பண்பாடு இன்றும் என்றும் அழிவதில்லை என்பதை தமிழ் துறை சிறப்பாக வெளிப்படுத்தியது.
மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவி ஜோஸ்பின் ரேணுகா மற்றும் ஜெய மலர் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.