தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான தொல்லைகளை கல்லூரி பேராசிரியர் செய்து வந்ததாக புகார் எழுந்தது.
கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் சார்பில் புகார் மனு அளித்து பேராசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
கல்லூரி பேராசிரியரின் செயலை கண்டித்து தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்கள் சார்பில் கல்லூரி பேராசிரியரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மாதா, பிதா, குரு, பிறகு தான் தெய்வம் என்பார்கள் அப்படி இறைவனுக்கு முன்பு, தாய், தந்தைக்கு அடித்தப் படியாக குருவை (ஆசிரியர்) எல்லோரும் வணங்குகிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், அவர்களின் வாழ்க்கை பாலமாகவும் விளங்குகின்றனர். ஆசியர்களை பெற்றோர்கள் தெய்வமாகவே பார்க்கிறார்கள். எங்கள் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம். அவர்களின் எதிர்காலம் தங்களிடத்தில் தான் உள்ளது.
எங்கள் குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது உங்களை போல ஆசிரியர்களின் கடமை என்று குழந்தைகளை ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை நம்பி தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு விழிப்புணர்வு, மற்றும் கருத்தரங்கம் நடத்தினாலும், ஆங்காங்கே சில பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகள் மீது பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லைகளை செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடியில் இன்று (04.04.2025) மாலை இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரை கண்டித்து மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாது உடனே பேராசிரியை கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!! என்று கோஷங்கள் எழுப்பினர் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர். தமிழக அரசு பாலியல் சம்பந்தமான கூட்டங்களை மாதம் தோறும் நடத்தவேண்டும். ஆங்காங்கே பாலியல் சம்பந்தமான புகார் பெட்டிகள் அமைத்து குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் ஷாம், பிரதீப், நந்தகுமார், அருண்பாண்டி, அருண்குமார், ஆதி, லோகேஷ், திலீபன், முத்துவேல், சுப்பிரமணி, சுபாஷ், குணா உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.