தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையாவின் நூற்றாண்டு நினைவேந்தல் விழாவும், சிறந்த படைப்பாளர்களுக்கு படைப்பாளுமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை மாலை பெருங்குளம் பஜனை மடம் சன்னதி தெருவில் நடைபெற்றது.


விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் மருத்துவர் திருமதி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலரும், எழுத்தாளருமான முனைவர் மணிமொழி செல்வன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சீனிவாசன் ஐயங்கார், பெருங்குளம் கண்ணன் ஐயங்கார், ஆறுமுக பாண்டியன், பேச்சிமுத்து, வெங்கடாச்சாரி ஐயங்கார், கதிர்வேல் ராமானுஜம், சோலைமலை, பாலாஜி ஐயங்கார், கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வழக்கறிஞரும் இதழாளருமான கணபதி சுப்ரமணியம், இசைக்கும் மணி காசிராஜன், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஆறுமுகப்பெருமாள், நாசரேத் இலக்கிய முன்னோடி மாரிமுத்து, புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் பெருங்குளம் மாதவையாவின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்து அறிமுக உரையாற்றினர். தொடர்ந்து சிறந்த படைப்பாளர்களுக்கு படைப்பாளுமை விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ராமச்சந்திரன் மற்றும் பேராசிரியர் சத்தியபாலன் ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினர்.


விருது பெற்றவர்களில் பன்முகப் படைப்பாளரும் ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் இளங்கோமணி (திருநெல்வேலி), வாழ்வியல் தத்துவ எழுத்தாளர் முனைவர் மணிமொழி செல்வன் (பெருங்குளம்), பன்முகப் படைப்பாளரும் சமூக ஆர்வலருமான முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் (திருநெல்வேலி), ஹைக்கூ மற்றும் தன்முனைக் கவிஞரான ஆத்தூர் சாகுல் (தூத்துக்குடி), தொழில்முறை மற்றும் தொல்லியல் வரலாற்று ஓவியக் கலைஞரான ஓவியர் வரவுணன் (சிறுவைகுண்டம்) ஆகியோர் இடம்பெற்றனர்.


விருது பெற்ற படைப்பாளர்கள் ஏற்புரையாற்றினர். நிறைவில் தாமிரபரணி இலக்கிய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.