ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், மேலான சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் மகன் மணிகண்டன் (பனைத் தொழிலாளி) என்பவரை, அண்மையில் ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் இரு கால்களிலும் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


அங்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்கான அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வழக்கறிஞர் சிலுவை மேற்கொண்ட முயற்சியின் பேரில், மணிகண்டன் புதன்கிழமை மாலை தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதற்கிடையில், நாடார் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து மணிகண்டனின் சிகிச்சை செலவுகளை முழுமையாக ஏற்க முன்வந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் சிலுவை தெரிவித்துள்ளார்.