தூத்துக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனைத்து வாசல்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் A. சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.


தற்போது மருத்துவமனையில் VVD சிக்னல் அருகே அமைந்துள்ள பிரதான வாசல் மட்டுமே இரவு பகல் என 24 மணி நேரமும் திறந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் நோயாளிகள் வருகை, செல்லும் பணிகளில் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மருத்துவமனைக்கு திருச்செந்தூர் பிரதான சாலை வழியாக ஒரு வாசலும், சுப்பையா முதலியார்புரம் தெரு வழியாக மற்றொரு வாசலும் உள்ளன. எனினும், இவ்விரு வாசல்களும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. குறிப்பாக சுப்பையா முதலியார்புரம் பகுதியிலுள்ள வாசல், ஆம்புலன்ஸ் வரும் நேரங்களில் மட்டும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால் மருத்துவமனையின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி, அவசர நிலைகளில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
எனவே, மருத்துவமனையில் உள்ள மூன்று வாசல்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் வலியுறுத்தினார்.


குறைந்தபட்சமாக காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை அனைத்து வாசல்களையும் திறந்துவைத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தாய்பேறு பிரிவில் உள்ள லிப்ட் 24 மணி நேரமும் செயல்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும், மருத்துவமனை முழுவதும் தரமான குடிநீர் வசதி மற்றும் போதிய மின் விளக்கு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் முத்து பெரியநாயகம், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் அன்னராஜ், மாவட்ட நிர்வாகிகள் முகேஷ், குலசை ஈ.வி.ரமேஷ், பொன் விக்னேஷ், மண்டல் நிர்வாகிகள் விக்னேஷ், சுந்தர், கார்த்திக், கல்யாணசுந்தரம், ராஜேஷ், மாரிஸ் குமார் மற்றும் சமூக ஆர்வலர் பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.