தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்லும் ரயில்கள் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்காக, தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பில் மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகள் அதிகளவில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும், போதிய நேரடி ரயில் சேவைகள் இல்லாததால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு தாம்பரம் அல்லது 6.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் வகையில் ஒரு பகல் நேர அம்ரித் பாரத் விரைவு ரயிலை இயக்கலாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே ரயிலை மறுமார்க்கமாக, சென்னையிலிருந்து (எழும்பூர் இரவு 9.15 மணி / தாம்பரம் இரவு 9.40 மணி) திருச்செந்தூருக்கு இரவு நேர சேவையாக இயக்கி, திருநெல்வேலிக்கு காலை 8 மணிக்கும், திருச்செந்தூருக்கு காலை 10.10 மணிக்கும் சென்றடையும் வகையில் பழைய ஹவுரா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் கொல்லம் மெயில் வழித்தடத்தை பயன்படுத்தி இயக்கி, அதனை பகல் நேர தூத்துக்குடி சேவையாக மாற்றவும் வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த வழித்தடத்தில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.