தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் மற்றும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில்களில் அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இரு கோவில்களுக்கும் புதிய அறங்காவலர்கள் நியமிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது.


இதன் தொடர்ச்சியாக, எந்த மாற்றமும் இன்றி இரண்டாவது முறையாகவும் அதே நபர்களே இரு கோவில்களுக்கும் அறங்காவலர் குழுவாக மீண்டும் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை அறநிலையத்துறை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை, அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் இரு கோவில்களிலும் தனித்தனியாக நடைபெற்றது. இத்தேர்தலை அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சுப்புலட்சுமி நடத்தினார்.


சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில், ஏற்கனவே தலைவராக இருந்த கந்தசாமி மீண்டும் ஒருமனதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தலைவர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், கே.கே.ஜி. இளங்குமரன், சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அதனைத் தொடர்ந்து வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்ற தலைவர் தேர்தலில், ஏற்கனவே தலைவராக இருந்த செந்தில்குமார் மீண்டும் ஒருமனதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, மகேஸ்வரன் ஆகியோருக்கும் தனித்தனியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, வெளியே வந்த அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சங்கர ராமேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் பாஸ்கர், கல்யாணி, பொன்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், “மீண்டும் எங்களை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பரிந்துரை செய்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பணிகள் இனி வேகமாக நடைபெறும். கல் வேலைகள் ஏற்கனவே 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. டெண்டர் முடிவடைந்து, இன்னும் ஆறு மாதத்திற்குள் அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் அனைத்து அறங்காவலர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.