ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கருங்குளம் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நேரடியாக பயன் தரும் சேவைகளை தொடங்கி வைத்தார். கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 10.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


அதேபோல், கீழ வல்லநாடு ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கனிமம் மற்றும் சுரங்கத் திட்டத்தின் கீழ் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 14.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடமும் திறக்கப்பட்டது. இங்கும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சியில் பார்வதியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்த கலையரங்கம் கிராம நிகழ்வுகள் மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு முக்கியமான வசதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், வல்லநாடு V.T.V.D அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ் 54 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தொடங்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மேலும், வசவப்புரம் ஊராட்சி அனைவரதநல்லூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடமும், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது நூலகக் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த தொடர் நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.