தூத்துக்குடி மாவட்ட அரசியலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி எப்போதும் முக்கிய கவனம் பெறும் தொகுதியாக இருந்து வருகிறது. அந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று, அரசியல் வட்டாரங்களில் “அசைக்க முடியாத சக்தி” என அழைக்கப்படுபவர் கடம்பூர் ராஜு.
கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் பிறந்த கடம்பூர் ராஜு, பொதுக் கல்வியை முடித்த பின் ஆசிரியர் பயிற்சி பெற்று, சொந்த ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அடிப்படை மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அந்த அனுபவமே அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியர் பணியை விட்டு விலகி அரசியலில் முழுமையாக ஈடுபட்ட அவர், அ.தி.மு.க.வில் இணைந்து படிப்படியாக வளர்ந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றது அவரது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக, அந்தத் தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரடியாக எதிர்த்து பெற்ற வெற்றி, அவரை கட்சித் தலைமையால் தவிர்க்க முடியாத தலைவராக உயர்த்தியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதும் கோவில்பட்டி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள கடம்பூர் ராஜு, தொகுதி மக்களுடன் நெருக்கமான தொடர்பு, தொடர்ச்சியான அரசியல் செயல்பாடு மற்றும் தேர்தல் கள அனுபவம் ஆகியவற்றின் மூலம் தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளார். இதுவரை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு மூன்றுமுறையும் வெற்றி பெற்றுள்ளதே அவரது அரசியல் பலத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், கடந்த தேர்தலில் எதிரணியாக இருந்த அமமுக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலை, கடம்பூர் ராஜுவின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதனால், கோவில்பட்டி தொகுதியில் அவரை எதிர்த்து ஆளும் திமுக அரசு வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல என்றே அரசியல் கணக்குகள் சொல்லுகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி உறுதியானது என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.