தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தமது தொகுதி மக்களின் அடிப்படை மருத்துவ வசதி குறித்த கடும் குறைபாடுகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அவர் பேசுகையில், தருவைகுளம், வசவப்புரம், குலையன்கரிசல், புளியம்பட்டி, தெய்வச்செயல்புரம், மேல தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சிறிய மருத்துவ தேவைகளுக்காக கூட சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மருத்துவ வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் அவசர நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக குறிப்பிட்ட அவர், மேற்கண்ட பகுதிகளில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேவையான இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கிராமப்புற மக்களின் நீண்ட நாள் மருத்துவ கோரிக்கை சட்டசபையில் மீண்டும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.