தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி, வரும் 2026–2027 கல்வியாண்டில் துவங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் 30.04.2026 அன்று வழங்கியுள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி பெற புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.


முன்னதாக, 19.05.2025 அன்று பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள், தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளித்திருந்தார். தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் இருந்தார்.


இந்நிலையில், பள்ளி அமைப்பதற்கான இடத்தை வ.உ.சி துறைமுகம் தனது வளாகத்தில் வழங்க முன்வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பள்ளி துவங்கப்படுவதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒரே தரமான கல்வி கிடைக்கும்.


இடமாற்றம் ஏற்பட்டாலும் கல்வி இடையூறு இன்றி தொடரும். குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி பெறும் வாய்ப்பு உருவாகும். CBSE பாடத்திட்டம் மூலம் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் சிறப்பாக தயாராக முடியும். இந்த திட்டம் நடைமுறைக்கு வர சித்ராங்கதன் அவர்களின் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறிவிப்பை தூத்துக்குடி பொதுமக்கள், குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.