கோவில்பட்டி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலன், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் ஆகியவை மேம்படவும், குறிப்பாக பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாதவாறு அருள் கிடைக்கவும் வேண்டி சங்கல்பம் செய்து கலச விளக்குவேள்வி பூஜை நடத்தப்பட்டது. இந்த வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத்தின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மன்ற தலைவர் அப்பாசாமி சக்தி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து “அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் மகளிர் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 25 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக சேலைகள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தளவாய்புரம் மன்ற தலைவர் ராஜ் மற்றும் கழுகுமலை மன்ற தலைவர் அழகர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திரா நகர் மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம் உள்ளிட்ட மன்ற பொறுப்பாளர்கள் அருணாசல பாண்டியன், கற்பகவள்ளி, ராதா, விஸ்வநாத், இராஜலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.