தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.


சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் பகுதிகளுக்கான நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டதுடன், மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கான அதிநவீன கழிப்பறையும் தொடங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து வி.வி.டி ரோடு – பண்டுகரை சாலை சந்திப்பில் (4ஆம் ரயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தூத்துக்குடி மாநகராட்சி 11வது வார்டு எஸ்.கே.எஸ்.ஆர். காலனி (எழில் நகர்) பகுதியில் ரூ.33.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, பசுமை அமைப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் பூங்கா உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


ஆனால், பூங்காவில் சில பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில் அவசரமாக திறந்து வைக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். தரைப்பணி, பசுமை அமைப்பு உள்ளிட்ட வேலைகள் நிறைவடையாமல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். “பணிகள் முடிந்த பின் திறந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். திறப்பு விழா மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், முழுமை பெறாத பணிகள் குறித்து எழுந்த கேள்விகள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.


நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய பூங்கா மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவேற்றப்படுமா என்பது எழில் நகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.