தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் நலப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சாலை, கால்வாய், மின்விளக்கு, பூங்கா, படிப்பகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் கடந்த 45 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் முன்னுரிமையுடன் நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 20 மாதங்களாக நான்கு மண்டலங்களிலும் புதன்கிழமைகளில் 15 வாா்டுகளுக்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 15 பேருக்கு பல்வேறு வகையான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சான்றிதழ்களை வழங்கியபின் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியபோது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை. கடந்த 10 ஆண்டுகளில் (அதிமுக ஆட்சியில்) வளர்ச்சி எனப் பெயரிட்டு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. மழை பெய்தாலே தண்ணீர் தேங்கிய பகுதிகளை நீக்குவதற்காக, எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது தூத்துக்குடி பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்தார். அவர் வழங்கிய உத்தரவின் பேரில், இன்று 60 வாா்டுகளிலும் சமநிலை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.

மேலும், “57 வாா்டுகளில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். 2, 16, 17 ஆகிய சில வாா்டுகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் புதிய வடிகால் வழித்தடங்கள் அமைத்து, மின்மோட்டார் மற்றும் கழிவு நீர் வாகனங்கள் மூலம் 90 சதவீத இடங்களில் மழைநீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். வரும் வடகிழக்கு பருவமழையையும் கருத்தில் கொண்டு, அனைத்து அதிகாரிகளும் தயார்நிலையில் உள்ளனர்,” என்று கூறினார்.

அவர் மேலும், “மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவை நாம் மனதில் வைத்துள்ளோம். மக்களுக்காக, மக்களிடமிருந்தே கிடைத்த அந்த பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதே எங்கள் கடமை,” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கனகராஜ், ரெக்ஸின், பட்சிராஜ், முத்துவேல், மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் ரவீந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.