தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, இணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு உதவி செயற்பொறியாளர் காந்திமதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் வாரம் ஒருமுறை குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, “உங்களுடன் ஸ்டாலின்” பகுதி சபா கூட்டங்களும் நடைபெறுகின்றன. மக்கள் குறைகள் மாநகராட்சி இணையதளம் மூலமாகவும் பெறப்பட்டு தீர்க்கப்படுகின்றன.

சமீபத்திய கனமழையின் போது நகரம் முழுவதும் நீர் தேங்காமல் இருந்தது. சில இடங்களில் தேங்கிய மழைநீர் மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. தாழ்வான பகுதிகளான கோக்கூர் குளம் மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளில் நீர் தேக்கம் நீங்கும் வகையில் புதிய வடிகால் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

974 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, சந்தை ரோடு உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெறுகின்றன. மழைநீர் வெளியேற்றம் மற்றும் சாலை அமைப்புகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

கூட்டத்தில் எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில், “தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நீண்ட நாட்களாக மானிய விலையில் வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை வழங்குவதற்கான நடவடிக்கை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் முயற்சியில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதனை வழங்குவார்” என தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சிக்குரிய பூங்கா மற்றும் சமுதாய நலக் கூடங்கள் சில ஆக்கிரமிப்பில் உள்ளன; அவை விரைவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் கூறினார். அசோக் நகர் பகுதியில் உள்ள ஓடைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மழைநீர் கடலுக்குச் செல்ல 14 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தெரு மின்விளக்குகளைப் பற்றி பேசுகையில், “பழைய 25, 30 வால்ட் விளக்குகள் மாற்றி 90 வால்ட் மின்விளக்குகள் பொருத்தப்படும். மாநகராட்சியின் விரிவாக்கத்தால் 1,288 மின்விளக்குகள் தேவையாக உள்ளன; அதற்கான அனுமதி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார். குடிநீர் விநியோகத்தில் சீராக பணி நடைபெற்று வருவதாகவும், சண்முகபுரம் பகுதியில் புதிய கருப்பு பைப் மூலம் 3,600 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.