இந்திய திருநாட்டில் பசுமை வளம் சிறக்க வேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சித்ரா பவுர்ணமி சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையேற்று வழிநடத்தினார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஸ்ரீவிநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மதியம் 12 மணியளவில் மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் மற்றும் குருமகாலிங்கேஸ்வரருக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மஹா யாகத்தில் உலகில் அமைதி நிலவவும், யுத்தங்கள் ஒழியவும், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அக்னி நட்சத்திர கோடைவெயிலின் தாக்கம் குறையவும், பருவமழை சிறப்பாக பெய்து நாட்டில் பசுமை வளம் மற்றும் விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர் மதியம் 1.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையிலான வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.